ரூ.5000 கோடி மட்டுமே கடன் உள்ளது; சொத்துக்களை விற்று கடனை அடைக்கத் தயார்: நிரவ் மோடி கடிதம்

ரூ.5000 கோடி மட்டுமே கடன் உள்ளது; சொத்துக்களை விற்று கடனை அடைக்கத் தயார்: நிரவ் மோடி கடிதம்
Updated on
1 min read

வங்கியில் தனக்கு ரூ.5000 கோடி மட்டுமே கடன் உள்ளதாகவும் சொத்துக்களை விற்றாவது அதை திருப்பித்தர தயாராக இருப்பதாகவும் வைர வியாபாரி நிரவ் மோடி கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கை எதிர்கொண்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டில் இருந்தபடியே சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "பஞ்சாப் நேஷனல் வங்கி நான் தரவேண்டிய கடன் தொகையை தவறாகக் குறிப்பிட்டுள்ளது. எனக்கு ரூ.5000 கோடி மட்டுமே கடன் உள்ளது. வங்கியின் அவசரத்தால் ஊடகங்களில் இது மிகப்பெரிய செய்தியாகி எனது நிறுவனங்களில் தேடுதல் வேட்டை மற்றும் பணி முடக்கம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இதன் காரணமாக வங்கிகளுக்கு நாங்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகையை திருப்பி செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடன் நிலுவைத் தொகையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வங்கி காட்டிய கெடுபிடியால் பிப்ரவரி 13-ம் தேதி நான் நடத்திய பேச்சுவார்த்தையைக்கூட நீங்கள் பொருட்படுத்தவில்லை. உங்களது நடவடிக்கையால் எனது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது எனது நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சரிந்துள்ளது.

பிப்ரவரி 13 மற்றும் 15 தேதிகளில் எனது பிரதிநிதிகளும் வங்கிப் பிரதிநிதிகளும், வங்கி அதிகாரிகளும் கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீங்கள் புகார் பதிவு செய்த பின்னரும்கூட எனது ஃபயர்ஸ்டார் நிறுவனம், மற்றும் பிற சொத்துக்களை விற்க அனுமதிக்குமாறு நல்லெண்ணத்தின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அதையும் நீங்கள் பொருட்படுத்தவில்லை. நான் வங்கியை மோசடி செய்யவில்லை கடனை திருப்பிச் செலுத்தவும் தயாராக இருக்கிறேன். எனது நிறுவனங்களில் வேலை செய்யும் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் தரவேண்டியுள்ளது. அதை, அனுமதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in