Published : 27 Mar 2024 07:55 AM
Last Updated : 27 Mar 2024 07:55 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியின் சுயேச்சை எம்பியும் நடிகையுமான சுமலதாவுக்கு மீண்டும் அந்த தொகுதியை ஒதுக்க பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர் சுயேச்சையாக போட்டியிடலாமா? என தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒரு முறை மஜத சார்பிலும், 2 முறை காங்கிரஸ் சார்பிலும் அவர் எம்பியாக தேர்வானார். அவரது மறைவுக்கு பிறகு மனைவி சுமலதா காங்கிரஸ் சார்பில் மண்டியாவில் களமிறங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் அவருக்கு சீட் வழங்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து பாஜக மேலிடம் சுமலதாவிடம் தங்களது கட்சியில் இணையுமாறு வலியுறுத்தியது. ஆனால் அவர் பாஜகவில் சேராமல், தொடர்ந்து அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மண்டியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவதாக கூறினார். அதனை பரிசீலிப்பதாக அவர் கூறியதால், சுமலதாவும் ஆசையோடு காத்திருந்தார்.
ஆனால் பாஜக மேலிடம் மண்டியா தொகுதியை தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி அல்லது அவரது மகன் நிகில் கவுடா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மண்டியா தொகுதியை பாஜக தர மறுத்ததால் சுமலதா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் கடந்த தேர்தலைபோல மீண்டும் சுயேச்சையாக களமிறங்கலாமா? என தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் சுயேச்சை யாக களமிறங்கினால் நிறைய செலவு செய்ய நேரிடும் என்பதால், பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் நடிகை சுமலதா மண்டியா தொகுதியின் முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யா பாணியில் அரசியலில் இருந்து விலக முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.ஜ.த.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT