பிரதமர் வீடு முற்றுகை போராட்டம்: ஆம் ஆத்மி அறிவிப்பால் டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் வீடு முற்றுகை போராட்டம்: ஆம் ஆத்மி அறிவிப்பால் டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் பிரதமர் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. இதனை நிராகரித்து வந்த கேஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் மகா பேரணி என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க் கிழமை) பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் டெல்லி காவல் ஆணையர் அளித்த ஊடகப் பேட்டியில், “பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி பேரணியோ, முற்றுகைப் போராட்டமோ நடத்த நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. பிரதமர் இல்லம் அமைந்துள்ள பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in