

கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் (பிகினி) வருவோருக்கு தனி இடம் ஒதுக்கலாம், அதற்கு ரூ.2000 கட்டணம் வசூலிக்கலாம் என்று மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி எம்.எல்.ஏ. லாவு மம்லேகர் யோசனை தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் சுதின் தவலிகர் அண்மையில் அளித்த பேட்டியில், கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் வருவதற்கு தடை விதிக்க வேண்டும், குட்டை பாவாடை அணிந்து கேளிக்கை விடுதிகளுக்கு செல் வதை தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான மகாராஷ் டிரவாதி கோமந்தக் கட்சி எம்.எல்.ஏ. லாவு மம்லேகர் கோவா சட்டமன்றத்தில் வியாழக்கிழமை பேசியபோது, கோவா கடற் கரையில் நீச்சல் உடையில் பெண்கள் குளிப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது.
நீச்சல் உடையில் வருவோருக்கு கடற்கரையில் தனி இடத்தை ஒதுக்க வேண்டும். அங்கு ரூ.2000 வரை கட்டணம் வசூலிக்கலாம். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும், சுற்றுலாவும் மேம்படும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து லாவு மம்லேகர் “தி இந்து”வுக்கு அளித்த பேட்டியில், இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் நமது கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும், அதற் காகத்தான் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளேன் என்றார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குருதாஸ் காமத் நிருபர்களிடம் கூறியபோது, பெண்களின் சுதந்திரத்தில் அரசு தலையிட முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.