Published : 25 Mar 2024 04:33 PM
Last Updated : 25 Mar 2024 04:33 PM

37 எம்.பி.க்களுக்கு ‘நோ’, கட்சித் தாவி வந்தோருக்கு ‘சீட்’ - பாஜக 5வது வேட்பாளர் பட்டியல் ஹைலைட்ஸ்

பாஜகவில் இணைந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் கொண்ட 5-வது பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பல்வேறு சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. 5-வது வேட்பாளர்கள் பட்டியலில் மொத்த 111 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் சிட்டிங் எம்.பி,க்கள் 37 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. இவர்களில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் சவுபே, வி.கே.சிங், வருண் காந்தி ஆகியோரும் அடங்குவர். இந்தப் பட்டியலில் நடிகர்கள் கங்கனா ரணாவத், அருண் கோவில் இடம்பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.

அனந்த்குமார் ஹெக்டேவுக்கு சீட் மறுப்பு: 6 முறை எம்.பி.யாக இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கு பாஜக சீட் மறுத்துள்ளது. அரசியல் சாசனம் பற்றிய அவரது கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வென்றால், அரசியல் சாசனத்தையே மாற்றிவிடுவோம் என் பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்தான் அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில்தான் அதிகம்: இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட 37 சிட்டிங் எம்.பி.க்களில் 9 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். எஞ்சியர்வர்களில் குஜராத் - 5, ஒடிசா - 4, பிஹார், கர்நாடகா, ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் மூவர் ஆவர். உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் கடந்த முறை வருண் காந்தி வெற்றி பெற்றிருந்தார். இம்முறை அவருக்குப் பதிலாக அத்தொகுதியில் ஜிதின் பிரசாதா களம் இறக்கப்படுகிறார்.

37 பேருக்கு சீட் மறுக்கப்பட்டாலும் இந்தப் பட்டியலில் சிலருக்கு மீண்டும் அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டவர்களும் இருக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் பெகுசராயிலும், ரவி சங்கர் பிரசாத் பாட்னா சாஹிப் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அதேபோல் அமைச்சர்கள் ஆர்.கே. சிங், நித்யானந்த் ராய் ஆகியோர் அவரவர் தொகுதியிலேயே களம் காண்கின்றனர்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இம்முறை சம்பல்பூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் புரி தொகுதியில் தோல்வியுற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ராவுக்கு இம்முறையும் அதே தொகுதி ஒதுக்க்ப்பட்டுள்ளது.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பூங்கொத்து: சிட்டிங் எம்.பி.க்களுக்கு கல்தா கொடுத்திருந்தாலும் தேர்தலுக்கு முன்னர் கட்சி மாறி பாஜகவுக்கு தாவிய சீதா சோரன், தபஸ் ராய், என் கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸில் இருந்து விலகி கட்சியில் இணைந்த நவீன் ஜிண்டால், ஜிதின் பிசாத் ஆகியோருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

நவீன் ஜிண்டால் குருஷேத்ராவில் இருந்து களம் காண்பார். வருண் காந்தியை பாஜக கைவிட்டிருந்தாலும் அவரது தாயார் மேனகா காந்திக்கு சீட் மறுக்கவில்லை. அவருக்கு சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காலி வன்முறையில் பாதிக்கப்பட்டவராக அறியப்படும் ரேகா பத்ராவுக்கு அம்மாநிலத்தின் பாஷிராத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மேதினிபூர் எம்.பி. திலிப் கோஷ் இம்முறை துர்காபூரில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியிலிருந்து சில காலத்துக்கு முன்னர் விலகி பாஜகவில் இணைந்த ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் தும்கா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். நடிகை கங்கனா ரணாவத் மாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் மீரட் நகரில் களம் இறங்குகிறார்.

முன்னாள் முதல்வருக்கு சீட்: கர்நாடகாவின் பெல்காம் தொகுதி அம்மாநில முன்னாள் முதல்வர் ஜகதீஷ் ஷெட்டாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தம்லுக் தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வயநாடு - ராகுல் vs கே.சுரேந்திரன்: வயநாட்டில் காங்கிரஸ் ராகுல் காந்தியை களம் இறக்கியுள்ள நிலையில், அங்கு பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது. 2009-ல் இருந்தே வயநாடு காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த தொகுதியாக அறியப்படுகிறது. 2019-ல் அங்கு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அமேதி தொகுதியிலும் அவர் போட்டியிட்டிருந்தார். ஆனால் அங்கு ஸ்மிருதி இரானி வெற்றி பெறவே ராகுலை காப்பாற்றியது வயநாடு.

இந்நிலையில்தான், கேரளாவின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை வயநாட்டில் ஆனி ராஜாவை வேட்பாளராக அறிவித்து ராகுலுக்கு கடும் சவால் விடுத்துள்ளது. இப்போது வயநாட்டில் ராகுல் காந்தி - ஆனி வினோத் - சுரேந்திரன் என்ற மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

மஹுவா vs ராஜமாதா: அதேபோல் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மஹுவா மொய்த்ராவை களமிறக்கியுள்ள நிலையில், அத தொகுதியில் பாஜக ராஜமாதா என்று அறியப்படும் அம்ரிதா ராயை களமிறக்கியுள்ளது. ராஜவம்சத்தைச் சேர்ந்த அம்ரிதா ராய் கடந்த 20-ஆம் தேதி தான் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தனக்கு எதிராக பாஜக வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பத்தில் இருப்பதாக மஹுவா மொய்த்ரா விமர்சித்திருந்தார். அந்த விமர்சனம் எழுந்த அடுத்த நாளே அத்தொகுதியில் அம்ரித் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை பாஜக 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. நேற்று மட்டும் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் ராய் தான் மிக முக்கியமானவராக அறியப்படுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x