

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாராணசியின் சிக்ரா பகுதிவாசி ஓய்வுபெற்ற ஆசிரியர் ஷம்பா ரக் ஷித். இவருக்கு கடந்த மார்ச் 8-ல் வந்தகைப்பேசி அழைப்பில், மத்திய தொலைதொடர்புத் துறையில் இருந்து பேசுவதாக ஒருவர் தெரிவித்துள்ளார். அப்போது தங்களின் கைப்பேசி எண் துண்டிக்கப்பட உள்ளதாகவும், அதற்கு முன்பாககாவல் துறையினர் தொடர்பு கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் வினய்சவுபே என்பவர் ரக்ஷித்தை கைப்பேசியில் அழைத்துள்ளார். மும்பையின் விலே பார்லே காவல் நிலையஅதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அப்போதுஉங்கள் கைப்பேசி எண்மூலம், மும்பையின் காட்கோப்பரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகப் புகார் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ரக் ஷித், தான் மும்பைக்கு வந்ததே இல்லை என மறுத்துள்ளார். எனினும், இவ்வழக்கிலிருந்து ரக் ஷித்தை காப்பாற்றுவதாகக் கூறிய வினய் சவுபே, தனது அடையாளத்தை மறைக்க தொடர்ந்து கைப்பேசியில் ஸ்கைப் செயலி மூலம் பேசியுள்ளார்.
இப்பிரச்சினையை எவரிடமும் கூறக்கூடாது என உத்தரவிட்ட சவுபே, கைதிலிருந்து தப்ப ரிசர்வ் வங்கிக் கணக்கு எனக் கூறி தனியார் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி செலுத்துமாறு கூறியுள்ளார். மார்ச் 11-ல் பெறப்பட்ட இந்த தொகை வழக்கின் விசாரணைக்கு பின் திரும்ப கிடைக்கும் என போலி வாக்குறுதி அளித்துள்ளார். மறுநாள் மார்ச் 12-ல் மேலும் ரூ.55 லட்சத்தை அதே வங்கிக் கணக்கில் பெற்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த ரக் ஷித், வாராணசி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கை விசாரிக்க கூடுதல் துணை காவல் ஆணையர் சரவணன் ஐபிஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழரான சரவணன், வங்கிக்கணக்கு விவரங்களைக் கொண்டுகுற்றவாளிகளை 3 நாட்களில் கைதுசெய்துள்ளார். லக்னோவைச் சேர்ந்த 4 பேர், குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 2 பேர் என 6 பேர் கைதாகி உள்ளனர்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை’யிடம் ஏடிசிபியான சரவணன் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்டவரை டிஜிட்டல் கைது முறையில் அவரை தனது வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலி இணையம் உருவாக்கி தனது படமும் பதிவானதைப் பார்த்து ரக்ஷித் அச்சப்பட்டு நம்பி ஏமாந்துள்ளார்.
இந்த குற்றத்தில் இரண்டு தனியார் வங்கி அலுவலர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது. எனவே, முன்பின் தெரியாதவர்கள் ஸ்கைப் போன்ற எந்த வீடியோ போனில் அழைத்தாலும் பதிலளிக்கக் கூடாது. எந்த ஒரு வங்கி அலுவலரும் கைப்பேசி வழியாக கைது செய்வதாக மிரட்ட சட்டத்தில் இடமில்லை’’ என்றார்.
தமிழ்நாடு தொடர்பு: குற்றவாளிகளிடம் இருந்து ரூ.13.63 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பல்வேறு வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.2 கோடியும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் பல வங்கிகளில் நடந்தபணப்பரிமாற்றம் மீது ஹைதராபாத், குஜராத், உ.பி., ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் என மொத்தம் ரூ.3.5 கோடியை சுமார் 2,500 தனியார் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. இந்தபணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய அனைவரும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.