Published : 25 Mar 2024 05:42 AM
Last Updated : 25 Mar 2024 05:42 AM

கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் 30 ஈரானியர்கள், 27 பாகிஸ்தானியர்கள் மீட்பு: இந்திய கடற்படை அதிகாரிகள் தகவல்

மும்பை: கடற்கொள்ளையர்களின் அத்து மீறல் அதிகரித்து வருகிற நிலையில், இந்திய கடற்படை கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 30 பேர்ஈரானியர்கள்; 27 பேர் பாகிஸ்தானியர் என்றும் இந்திய கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை மேலும் கூறுகையில், “இந்திய கடற்பரப்பில் கடற்கொள்ளை மற்றும் டிரோன் தாக்குதல் சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மிகத் தீவிரமாக கடற்பரப்பை கண்காணித்து வருகிறோம். 13 கடற்கொள்ளை நிகழ்வுகளை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

இதில் 110 உயிர் காப்பற்றப்பட்டுள்ளது. அவர்களில் 45 பேர் இந்தியர்கள்; 65 பேர் வெளிநாட்டினர் ஆவர்.அவர்களில் 27 பேர் பாகிஸ்தானியர்கள்; 30 பேர் ஈரானியர்கள்”என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா முறியடித்தது. அப்போது 19 பாகிஸ்தானியர்கள் மீட்கப்பட்டனர்.

மால்டா சரக்கு கப்பல்: அதேபோல், மால்டா குடியரசு நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ரூன். சரக்குக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேர், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி கடத்தினர். அந்தக் கப்பலில்ஒரு மில்லியன் டாலர் மதிப்பில் 37,800 டன் சரக்குகள் இருந்தன. இந்த கப்பலைப் பயன்படுத்தி, பிற சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

40 மணி நேர போராட்டம்: சோமாலிய கொள்ளையர்கள் குறித்து தகவலறிந்த இந்திய கடற்படை அதிகாரிகள், சோமாலியகடற் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அதைத் தொடர்ந்து சோமாலிய கடற்கொள்ளையர்கள் சென்ற கப்பலை, ஐ.என்.எஸ். கொல்கத்தா சுற்றி வளைத்தது.

சுமார் 40 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 17 பணியாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படையினர் பிடித்தனர். இந்நிலையில், நேற்று அவர்கள் மும்பை காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x