

காந்தி நகர்: தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்என்பது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றநிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர்நிதின் கட்கரி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த அருண் ஜேட்லி நிதிஅமைச்சராக இருந்த போது,தேர்தல் பத்திரங்கள் தொடர்பானஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். எந்த கட்சியும் நன்கொடைஇல்லாமல் இயங்க முடியாது.
சில நாடுகளில், அரசியல் கட்சிகளுக்கு அரசே நிதியை வழங்கி வருகிறது. இந்தியாவில் அதுபோன்ற நடைமுறை இல்லை. இதனால், கட்சிகளுக்கு நன்கொடை கிடைக்க தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்சி மாறினால் பணம்கொடுத்தவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நன்கொடையாளர்கள் பெயரை இதுவரை வெளியிடவில்லை.
தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கினால் அதுதொடர்பாக அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்.
இந்த விஷயத்தில் உண்மையான நிலைமையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதி இல்லாமல் கட்சிகளால் எப்படி தொடர்ந்து செயல்பட முடியும்?
வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே தேர்தல் பத்திர முறையை கொண்டு வந்தோம். நாங்கள் தேர்தல் பத்திரங்களைக்கொண்டு வந்தபோது எங்கள் எண்ணம் நல்லவிதமாகவே இருந்தது. அதில் ஏதேனும் குறைகள் இருப்பதை கண்டறிந்து, அதை சரி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டால், அனைத்துத் தரப்பினரும் ஒன்றாகஅமர்ந்து, அது குறித்து ஒருமனதாகவிவாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.