Published : 25 Mar 2024 06:09 AM
Last Updated : 25 Mar 2024 06:09 AM

நிலவில் சந்திரயான்-3 தரை இறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ என பெயரிட்டதற்கு சர்வதேச வானியல் சங்கம் ஒப்புதல்

பெங்களூரு: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘சிவசக்தி’ என பெயரிட்டார். அதற்கு சர்வதேச வானியல் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

வானியல் ஆய்வில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்கள், இடங்கள் ஆகியவற்றுக்கு வைக்கப்படும் பெயர்களுக்கு சர்வதேசவானியல் சங்கம் (ஐஏயு) ஒப்புதல் அளிக்கும். அதன்பின் அந்தப் பெயர்கள், கோள்களுக்கான அறிவிப்பு இதழில் வெளியிடப்படும்.

நிலவின் தென் துருவத்துக்கு முதன் முதலாக இந்தியா அனுப்பியசந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த இடத்துக்கு ‘சிவசக்தி’ என பிரதமர் மோடி பெயர் வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘சிவ என்ற பெயரில் மனித நேயத்துக்கான தீர்மானம் உள்ளது. அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தேவையான பலத்தை சக்தி அளிக்கிறது. நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி என்ற இடம் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொடர்பை உணர்த்துகிறது’’ என்றார்.

இந்தப் பெயருக்கு சர்வதேசவானியல் சங்கம் கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து கோள்களின் பெயர்களுக்கான அறிவிப்பு இதழ் விடுத்துள்ள செய்தியில், ‘‘சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு இந்திய புராணங்களில் இடம் பெற்றுள்ள சிவசக்தி என்ற கூட்டுப் பெயர் வைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -3 தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என பெயர் வைத்தபோதே, சந்திரயான்-2 விண்கலம் நிலவில் விழுந்த இடத்துக்கு ‘திரங்கா’ (மூவர்ணம்) என பிரதமர் மோடி பெயர் வைத்தார். தோல்வி இறுதியானது அல்ல என இந்த இடம் நமது ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகம் அளிக்கும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதேபோல் கடந்த 2008-ம்ஆண்டு சந்திரயான்-1 விண்கலம்தரையிறங்கிய இடத்துக்கு ‘ஜவஹர் பாய்ன்ட்’ என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x