பெங்களூரு மாநாட்டில் இந்தியில் பேசிய மோடி: மொழி தெரியாமல் நெளிந்த மக்கள்

பெங்களூரு மாநாட்டில் இந்தியில் பேசிய மோடி: மொழி தெரியாமல் நெளிந்த மக்கள்
Updated on
2 min read

பெங்களூரு மாநாட்டில் மோடி கலந்துகொண்டு இந்தியில் பேசியதால், கூட்டத்தில் வந்திருந்த கணிசமான பகுதியினருக்கு புரியவில்லை. இதனால் மோடியின் பேச்சு அதிருப்தியை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நெருங்க ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அங்கு மெல்ல மெல்ல அங்கு தேர்தல் பிரச்சாரம் தொடங்கியாகிவிட்டது.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பாஜகவின் பரிவர்த்தனா பேரணி மாநாட்டின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு முழுவதும் இந்தியில் இருந்ததது, இதனால் கூட்டத்தில் வந்திருந்த கன்னட மக்கள் பலருக்கும் புரியாத நிலை ஏற்பட்டது.

நரேந்திர மோடி பேசுவதற்காக சில வாங்கியங்கள் கன்னடத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் அவரது பேச்சு, தூய்மையான இந்தி மொழியில் இருந்தது. மேடையில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் மக்களின் ஒரு பகுதியினருக்கு அவரது பேச்சு புரியாமல் இருந்தது.

பாஜக நிர்வாகிகள் கூட பலர் இந்த மொழியைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொண்டனர். குறிப்பாக அவர் கையாண்ட எண்கள் சார்ந்த சொற்களை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு மொழிபெயர்ப்பாளரை மேடையில் நிறுத்ததாதற்கு, 'பிரதமரின் கால அட்டவணையில் நேரக் கட்டுப்பாடுகள்' என்ற காரணத்தை என்று அவர்கள் கூறினர். பாஜக தலைவர்கள் பலர், ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களைப் பின்பற்ற முடியவில்லை என்று கட்சி உறுப்பினர் ஒருவர் ஒப்புக் கொண்டார்.

முந்தைய தேர்தல்களில் தேசியத் தலைவர்கள் உரையாற்றும்போது ஒரு தேர்தல் கூட்டத்திற்கு ஒரு கன்னட மொழிபெயர்ப்பாளர் நிச்சயம் இடம்பெற்றிருப்பார். ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதை காண முடியவில்லை.

ஜனவரி மாதம் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா சித்ரதுர்காவிற்கு வந்தபோது இதுபோன்ற ஒரு மோசமான சூழலுக்கு வழிவகுத்தது. திரண்டிருந்த கர்நாடகா மக்கள் கூட்டத்தில் அவர் இந்தி மொழியிலேயே பேசினார். ஆனால் அவரது பாதி உரையிலிருந்து மொழிபெயர்ப்பாளரின் உரை கட்டாயமாகத் தேவைப்பட்டது.

அதற்குக் காரணம் அவரது உரையின் முன்பாதியில் முழுவதும் இந்தியில் இருந்ததால் மக்களிடமிருந்து எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது. அவர் மக்களைப் பார்த்து இந்தியில் ஒருகேள்வியைக் கேட்டார். அப்போது, மக்களிடமிருந்து அதற்கு மக்களிடமிருந்து ஒருபதிலும் வராமல் போகவே, பின்னர்தான், மொழிபெயர்ப்பாளருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமித்ஷாவின் சமீபத்திய மைசூர் கூட்டத்தில் அவரது பேச்சு மொழிபெயர்க்கப்பட்டது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹுப்பாளி மற்றும் பெங்களூரு கூட்டங்களில்கூட மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. மற்றபடி கடந்த ஆண்டு டிசம்பரில் பெங்களூரில் நடந்த ராஜ்நாத் சிங்கின் பேரணியில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இருந்தார்.

மேலும் மெட்ரோ பெயர்ப் பலகைகள் இந்தி மொழியிலேயே இடம்பெற்றதற்கு இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் பெங்களூருவில் நடந்துள்ளது.

மாநிலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஷோபா கரண்ட்லஜே, தென்னிந்தியாவில் இந்தி பேச்சுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை என்று ஒப்புக்கொண்டதோடு, கட்சி எதிர்காலத்தில் நிச்சயம் அதை செய்யும் என்பதையும் கூறினார்.

பல கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் இந்தக் கூட்டத்தைப் பொருத்தவரை சூரிய அஸ்தமனத்திற்குள் நகரத்திலிருந்து புறப்பட்டுவிட வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் கால அட்டவணை தான் இதன் பிரச்சினை என்று கூறினார்.

ராகுல் காந்தி இந்த வார இறுதியில் கர்நாடகா வருகிறார். அவர் மாநிலம் தழுவிய அளவில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். காங்கிரஸ் என்னவிதமான தந்திரோபாயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக மோடியின் இந்த பொதுக் கூட்டம் ஒரு பாடமாக அமைந்துவிட்டது என கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

தமிழில்: பால்நிலவன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in