3 முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக ஹோலி வண்ணம் பூசிய 4 பேர் கைது @ உ.பி.

3 முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக ஹோலி வண்ணம் பூசிய 4 பேர் கைது @ உ.பி.

Published on

பிஜ்னூர்: உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னூரில் ஹோலி கொண்டாடிய சில இளைஞர்கள் 3 முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணப்பொடிகளை பூசி, தண்ணீரை ஊற்றி அடாவடித்தனத்தில் ஈடுபட்டது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னூரில் நடந்துள்ளது. ஒரு ஆணும், 2 பெண்களும் இருசக்கர வாகனத்தில் மருந்தகத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தக் குடும்பத்துக்கு அறிமுகமில்லாத நான்கு ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று அவர்களை வழிமறித்து, அவர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் மீது வண்ணப்பொடிகளைப் பூசினர். மேலும், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

வைரலான வீடியோவில், தங்களின் வண்டியை நிறுத்திய இளைஞர்களிடம் வண்டியில் இருந்த முஸ்லிம் பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். முதலில் வண்டியை ஒட்டி வந்த ஆணின் முகத்தில் வண்ணத்தைப் பூசிய இளைஞர்கள், தொடர்ந்து பெண் ஒருவர் மீதும் பூசி, தண்ணீரை ஊற்றினர். அப்போது அந்த இளைஞர்கள் ஹர ஹர மகாதேவ், ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஹோலி ஹைய் என்று கோஷமிட்டனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் குறித்த வீடியோவை வைத்து அதில் ஈடுபட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே பிஜ்னூர் போலீஸ் நீரஜ் ஜடாவுன் வீடியோ செய்தி ஒன்றில்,"ஹோலி ஒரு புனிதமான பண்டிகை. கொண்டாட்டத்தின் பெயரில் யாரையும் துன்புறுத்தாதீர்கள். யார் மீதும் வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பூசாதீர்கள். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இந்த வைரல் வீடியோவுக்கு பதில் அளித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கர், இது உடல் ரீதியான கிரிமினல் தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in