கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக மார்ச் 31-ல் பேரணி: இண்டியா கூட்டணி அறிவிப்பு
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த இருப்பதாக ‘இண்டியா’ கூட்டணி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறுகையில், "ஜனநாயகமும் நாடும் அபாயத்தில் உள்ளது. நாட்டின் நலனையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக இண்டியா கூட்டணி இந்த மெகா பேரணியை நடத்த இருக்கிறது.
சர்வாதிகாரமாக நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் அனைவரும் கோபத்தில் உள்ளனர். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக மோடி கைது செய்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.
டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், "மார்ச் 31ம் தேதி நடக்கும் பேரணி அரசியல் சார்ந்ததாக இருக்காது. மாறாக நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பாகவும், மத்திய அரசுக்கு எதிரான குரலாகவும் இருக்கும்" என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் போராட்டம் நடத்துவதற்காக இண்டியா கூட்டணித் தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை சென்றனர்.
இந்தச் சந்திப்பின் போது இண்டியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவினை வழங்கினர். அதில், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை அடக்க மோடி அரசு இடைவிடாமல் சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கேஜ்ரிவால் கைது பின்னணி: டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அவர் மீது பணமோசடி வழக்கு பதிந்துள்ள அமலாக்கத்துறை, அவரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் அமலாக்கத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளார்.
