''டெல்லியின் குடிநீர் பிரச்சினையை தீருங்கள்'' - அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபடியே அமைச்சருக்கு கேஜ்ரிவால் உத்தரவு

''டெல்லியின் குடிநீர் பிரச்சினையை தீருங்கள்'' - அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபடியே அமைச்சருக்கு கேஜ்ரிவால் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபடியே, அமைச்சர் அடிஷிக்கு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, 22ம் தேதி அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. எனினும், 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, தற்போது அவர் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு நீர் அமைச்சர் அதிஷிக்கு கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அடிஷி, "கடும் நெருக்கடி நிலையில் உள்ளபோதிலும் டெல்லி மக்கள் மீது முதல்வர் கேஜ்ரிவால் அக்கறை காட்டுவது கண்ணீரை வரவழைக்கிறது.

கோடை தொடங்குவதற்கு முன்பாக, தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் டேங்குகளை அனுப்புமாறு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேஜ்ரிவால் உத்தரவிட்டார். மேலும், தேவைப்பட்டால் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் உதவியை நாடுமாறும், அவர் அனைத்து உதவிகளையும் செய்வார் என்றும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்" என கூறினார்.

முன்னதாக, தனது கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை ஆகியவற்றை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று(சனிக்கிழமை) மனு தாக்கல் செய்தனர். வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், ஹோலி பண்டிகைக்குப் பிறகே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி டெல்லியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in