பேரவை தேர்தலில் 160 தொகுதியில் வெல்லும்: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில், அக்கட்சியின் சட்டப்பேரவை, மக்களவை தொகுதி வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது.

இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் ரவுடிகள் அதிகரித்து விட்டனர். அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. கூட்டணியால் 31 பேருக்கு ‘சீட்’வழங்க முடியாமல் போனது. இவர்களின் தியாகம் மிகப்பெரியது. இவர்களுக்கு மாநில அல்லது மத்திய அரசு சார்பில் கண்டிப்பாக நன்மை நடக்கும். நமது கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.

இதுவே நமது லட்சியம். ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி 160 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. கடப்பா மக்களவைத் தொகுதியில் கூட நாம்தான் வெற்றி பெறுவோம். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முதல்வர் ஜெகன் இவ்வளவு மோசமாக ஆட்சி நடத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசின் தவறுகள் குறித்து கேள்வி கேட்டால் பொய் வழக்கு போடப் படுகிறது. பொய் பிரச்சாரம் செய்தே மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என ஜெகன் தப்பு கணக்கு போடுகிறார்.

25,000 கிலோ போதைப்பொருள் விசாகப்பட்டினத்தில் சிக்கி உள்ளது. பிரேசில் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜய்சாய் ரெட்டி அவருக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவிக்கிறார். இந்த போதைப் பொருள் பிரேசில் நாட்டில் இருந்துதான் வந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர். இதிலிருந்தே இதற்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in