Published : 11 Aug 2014 03:26 PM
Last Updated : 11 Aug 2014 03:26 PM

சச்சினின் விடுப்புக் கடிதம் ஏற்பு: மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

வருகைப் பதிவு சர்ச்சையில் சிக்கியுள்ள மாநிலங்களவை எம்.பி. சச்சின் டெண்டுல்கர், நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளமுடியாது என விடுப்பு கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை அவருக்கு விடுப்பு அளித்துள்ளது. ஆனால் இதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 3 முறை மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார், மற்றொரு உறுப்பினர் ரேகா 7 முறை மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் மாநிலங்களவை எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் தனது மூத்த சகோதரர் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த காரணத்தால் தன்னால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று துணைத் தலைவர் பி.ஜெ.குரியன், சச்சின் விடுப்புக் கடிதம் ஏற்கப்படுவதாக தெரிவித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால், சச்சின் நாடாளுமன்றத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள விக்யான் பவனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். ஆனால் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. இது அவர் அவையை மதிக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது என்றார்.

அதற்கு குரியன், அவையில் நிறைய உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக விடுப்பு எடுக்கின்றனர். ஆனால், யாருக்கு விடுப்பு அளிக்க வேண்டும், மறுக்க வேண்டும் என்பது அவைத் தலைவர் பொறுப்பு. இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றார்.

இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x