முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி மனோஜ் திவாரி, “ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் இன்னமும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் அரசை நடத்துவார் என ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து கூறுகிறார்கள். வன்முறை கும்பல்தான், சிறையில் இருந்தபடியே தங்கள் வேலையை செய்யும் என கேள்விப்பட்டிருக்கிறோம். சிறையில் இருந்து கொண்டு யாரும் அரசை நடத்த மாட்டார்கள்.

கேஜ்ரிவால் டெல்லியை கொள்ளையடித்துள்ளார். அவரது அரசு டெல்லியில் எந்த வேலையையும் செய்யவில்லை. அவர்கள் கொள்ளையடித்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டுள்ளனர். டெல்லிக்காக உயிரைக் கொடுத்து வேலை செய்தவர் கேஜ்ரிவால் என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். டெல்லியை துயரத்தின் விளிம்புக்கு கொண்டு வருவதற்கே அவர் தனது உயிரைக் கொடுத்து வேலை செய்துள்ளார். டெல்லி மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து மக்கள் இனிப்புகளை வழங்கினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “பொதுமக்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படி செயல்படக் கூடியவர் கேஜ்ரிவால். முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவர் மக்கள் சொல்படியே மேற்கொண்டுள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கட்சியின் அனைத்து எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களை கேஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். நாங்களும் எங்கள் வார்டில் உள்ள மக்களோடு பேசினோம். அனைவருமே கேஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினரும், இண்டியா கூட்டணி கட்சியினரும் இணைந்து டெல்லியில் உள்ள ஷாஹீதி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இதில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் சுதந்திரமா? நீங்கள் கேஜ்ரிவாலை கைது செய்யலாம். அவரது கொள்கையை உங்களால் கைது செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in