

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை, 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கு ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இம்முறை தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கட்சியினர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி, 144 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
பாஜக 6 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஜனசேனா 2 மக்களவை மற்றும் 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி மட்டுமே வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி ஏற்கெனவே 128 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நேற்று அக்கட்சி சார்பில் மேலும் 11 சட்டப்பேரவை மற்றும் 13 மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இது தெலுங்கு தேசம் கட்சியின் 3-வது வேட்பாளர் பட்டியல். மாநிலம் முழுவதும் வெற்றி பெறும் வேட்பாளர்கள் குறித்து சர்வே நடத்தி அதன் பிறகே தெலுங்கு தேசம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.