

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் இணைந்து பினாமி பெயர்களில் ரூ.100 கோடிமுறைகேடு செய்ததாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் அவரது வீட்டில் கைது செய்தனர். அன்றிரவே விமானம் மூலம் கவிதாவை டெல்லிக்கு அழைத்து சென்றனர். மறுநாள் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயத்தில் 23-ம் தேதி வரைஅமலாக்கத் துறையினர் கவிதாவை காவலில் எடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்திலேயே விசாரித்து வருகின்றனர். இன்றோடு அவரது விசாரணை காவலும் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், கவிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை ஒருமுறை குற்றவாளியாகவும், மறுமுறை சாட்சியாகவும் அழைத்துவிசாரித்தனர் என கவிதா குறிப்பிட்டிருந்தார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, தன்னை கைது செய்தது செல்லாது எனவும் அந்த மனுவில் கவிதா குறிப்பிட்டு இருந்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், தற்போதைய சூழலில் இவ்வழக்கில் ஜாமீன் வழங்க இயலாது எனவும், ஜாமீனுக்கு கீழமை நீதிமன்றத்தை அணுகவும் என்றும் கவிதாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.