

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோருக்கு எதிரான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வழக்கு விசாரணை வரும் மே மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பலர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் 2 வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் பதிவு செய்தன. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனிவிசாரித்து, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து கடந்த 2017 டிசம்பரில் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 மார்ச் மாதத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்கெனவே 6 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் 7-வது நீதிபதியாக தினேஷ்குமார் சர்மா விசாரித்தார். அப்போது, இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது தொடர்பான தீர்ப்பை அவர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்படுவதாக நீதிபதி நேற்று அறிவித்துள்ளார். வழக்கு விசாரணை வரும் மே மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.