

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம் என்று சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார். இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கூறியதாவது; நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். கேஜ்ரிவால் என்னுடன் இணைந்து பணியாற்றியவர். மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தற்போது அவரே மதுபானக் கொள்கைகளை வகுத்து வருகிறார். அவர் கைது செய்யப்பட்டதற்கு அவரது செயல்களே காரணம்.
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கும் திட்டம் பற்றி அறிந்து கேஜ்ரிவாலுக்கு நான் கடிதம் எழுதினேன். ஓர் அரசாக முடிவு எடுப்பது உங்கள் உரிமை. ஆனால் சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மதுபானத்தில் நீங்கள் ஏன் கவனம் செலுத்துகிறீர்கள்? சமூகத்தில் மற்ற பிரச்சினைகள் உள்ளன. மது மிக மோசமானது. மதுபானம் குறித்து கொள்கையை உருவாக்குவது முறையா என்று அவரிடம் கேட்டிருந்தேன்.
என்றாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இறுதியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவரது செயலே காரணம். அவர் மதுபானக் கொள்கையை உருவாக்கவில்லை என்றால் கைது செய்யப்படும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அவருடன் இணைந்து கேஜ்ரிவால் செயல்பட்டார். டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார். இதையடுத்து அன்னா ஹசாரேவின் விருப்பத்துக்கு மாறாக, கேஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
2012-ல் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கிய அவர். டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி முதல்வராகவும் பொறுப்பேற்றார்.