Published : 23 Mar 2024 07:27 AM
Last Updated : 23 Mar 2024 07:27 AM

குறுங்கோளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜெயந்த் மூர்த்தி பெயர்: இந்திய வானியற்பியல் நிறுவனம் பெருமிதம்

பெங்களூரு: விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தியின் பங்களிப்பைப் பாராட்டி அவரது பெயர் குறுங்கோள் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. சர்வதேச வானியல் சங்கத்தினால்இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக இந்திய வானியற்பியல் நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் விஞ்ஞானியாக 2011-ம்ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜெயந்த் மூர்த்தி. இவரது ஆராய்ச்சிகள் புளூட்டோ உள்ளிட்ட குறுங்கோள்களை மையப்படுத்தி இருந்தது. குறிப்பாக, பிரபஞ்சபுறஊதா கதிர்களின் பின்னணியைஅளவிடுவதில் கவனம் செலுத்தினார்.

சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் நிகழக்கூடிய வானியற்பியல் மாற்றங்களை உற்று நோக்குவதாக இவரது ஆய்வுகள் அமைந்தது. நாசாவிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தற்போது கவுரவ பேராசிரியராக வானியற்பியல் பாடம் கற்பித்து வருகிறார்.

விண்வெளியில் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுழன்றுகொண்டிருக்கிறது ஒரு குறுங்கோள். சூரியனை சுற்றி வர 3 ஆண்டுகள் 3 மாதங்கள் கால அவகாசம் எடுக்கும் இந்த குறுங்கோள் ‘2005 ஈஎக்ஸ்296’ (2005 EX296) என்றே இதுவரை அழைக்கப்பட்டது. தற்போது இதற்கு, ‘(215884) ஜெயந்த்மூர்த்தி’ என்று சர்வதேச வானியல் சங்கத்தினர் பெயர்சூட்டி இந்திய வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தியை கவுரப்படுத்தி இருக்கிறார்கள்.

இது பற்றி வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தி கூறியதாவது: நாசாவின் புதிய தொடுவான அறிவியல் குழுவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து பேரண்டத்தில் புறஊதா கதிர்களின் பின்னணியில் நிகழும் கதிரியக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தேன். இதனையொட்டி விண்வெளி ஆராய்ச்சியில் எனது பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக எனது பெயர் குறுங்கோளுக்குச் சூட்டப்பட்டிருப்பது என்னை பூரிப்படையச் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x