Published : 11 Feb 2018 08:52 AM
Last Updated : 11 Feb 2018 08:52 AM

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் சித்ரவதை தொடர்பாக ‘ஷி பாக்ஸ்’ஸில் 78 புகார்கள்: ஆர்டிஐ கேள்வியில் அம்பலம்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் சித்ரவதைகள் தொடர்பாக மத்திய அரசின் ஆன்லைன் ‘ஷி பாக்ஸ்’ஸில் இதுவரை 78 புகார்கள் வந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ‘ஷி பாக்ஸ்’ என்ற ஆன்லைன் புகார் பெட்டியை அறிமுகப்படுத்தியது. இதில் பாதிக்கப்படும் பெண்கள் முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும். முதலில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களும் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘ஷி பாக்ஸ்’ஸில் இதுவரை எத்தனை புகார்கள் வந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் கேள்வி கேட்டிருந்தது. அதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பதில் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘ஷி பாக்ஸ்’ தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை, பணிசெய்யும் இடங்களில் பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக மொத்தம் 78 புகார்கள் வந்துள்ளன. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இருந்து 34 புகார்கள், பல மாநிலங்களில் இருந்து 19 புகார்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து 25 புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று பெண்கள் நல அமைச்சகம் கூறியுள்ளது.

இவற்றில் அதிகப்பட்சமாக 4 புகார்கள் கேரளாவில் இருந்து வந்துள்ளன. அடுத்து பிஹாரில் 3 புகார்கள், தெலங்கானாவில் 2 மற்றும் உ.பி., டெல்லி, ஓடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட், குஜராத், ம.பி., ஆந்திரா, சத்தீஸ்கரில் இருந்து தலா ஒரு புகார்கள் வந்துள்ளன.

இவ்வாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x