

புதுடெல்லி: பிஹாரில் ஆள் கடத்தல், கொலை, கும்பல் வன்முறை, சிறை உடைப்பு என பல்வேறு வழக்குகளில் சிக்கி 17 ஆண்டுகள் சிறையில் இருந்த கிரிமினல் குற்றவாளி அசோக் மஹ்தோவின் மனைவிக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. கிரிமினல் வழக்கால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற காரணத்தால் மஹ்தோ அவசர அவசரமாக 46 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவியை வேட்பாளராக்கும் முயற்சியை எடுத்து இருப்பது பிஹார் அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
பிஹாரில் 1990 காலகட்டத்தில் முக்கிய கிரிமினலாக இருந்தவர் அசோக் மஹ்தோ. குர்மியின் பிரிவான கொய்ரி சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும் பூமியார் சமூகத்தின் மற்றொரு குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதியான அகிலேஷ் சிங்குக்கும் இடையேயான மோதலால் பிஹார் மாநிலமே நடுங்கியது. இவர்களின் மோதலால் சுமார் 200 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதன் பின்னணியில் நவாதாவின் மலைப்பகுதியில் கல் உடைப்பு மற்றும் மணல் அள்ளுதல் குத்தகையும் இடம் பெற்றிருந்தது.
இவர்களில் அசோக் மஹ்தோ மீது ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் 30 பதிவாகி இருந்தன. இதில், பூமியார் சமூகத் தலைவர் காங்கிரஸ் எம்பி ராஜு சிங் கொலையும் இருந்தது. இந்த வழக்கில் கைதான அசோக், 2001-ல் நடத்திய ஜெயில் உடைப்பு வழக்கில் 17 வருடம் தண்டனை பெற்றார். இந்தச் சம்பவத்தில் 3 சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் நெட்பிளிக்ஸிலும் தொடராக வெளியாகி பிரபலமானது.
இதனிடையே, மஹ்தோவின் பரம எதிரியான அகிலேஷின் மனைவி அருணா தேவி பிஹாரின் வர்சாலிகஞ்ச் தொகுதியில் நான்காவது முறை எம்எல்ஏவாக உள்ளார். அசோக் மஹ்தோவின் நெருங்கிய சகாவான பிரதீப் மஹ்தோவும் இரண்டாவது முறையாக எம்எல்ஏவாகி விட்டார். எனவே, தன் 17 வருடத் தண்டனைக்கு பின் கடந்த வருடம் டிசம்பரில் விடுதலையான அசோக் மஹ்தோவுக்கும் அரசியலில் நுழையும் விருப்பம் ஏற்பட்டது. இதனால், கடந்த செவ்வாய்கிழமை மாலை, அனிதா யாதவ் (46) என்பவரை அசோக் திடீர் என மணமுடித்தார்.
தனக்கு கிடைத்த 3 வருடத்துக்கும் அதிகமான சிறைத் தண்டனையால் மஹ்தோவால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, இந்தத் திருமணம், தன் மனைவி அனிதா யாதவை தேர்தலில் போட்டியிட வைக்க நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.
இதன் மறுநாளான நேற்று ஆர்ஜேடி தலைவர் லாலுவிடம் ஆசிபெறச் சென்றார் அசோக். இதில் அவரது மனைவி அனிதாவுக்கு ஆர்ஜேடியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.
நவாதா பகுதியைச் சேர்ந்தாலும் அதன் அருகிலுள்ள முங்கேர் தொகுதியில் மனைவி அனிதாவை போட்டியிட வைக்கிறார் அசோக் மஹ்தோ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முங்கேரில் பிஹாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லல்லன்சிங் எனும் ராஜீவ் ரஞ்சன் சிங் எம்பி மீண்டும் போட்டியிடுகிறார்.
இதுபோன்ற தேர்தலுக்கான திருமணம் பிஹாரில் முதன்முறையல்ல. 2011 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் குற்றவியலாளரான அஜய்சிங் மணமுடித்து தனது மனைவி கவிதா சிங்கை ஐக்கிய ஜனதா தளத்தில் எம்எல்ஏவாக்கினார். பிறகு, அவர் 2019 இல் சிவான் தொகுதி எம்.பி.,யாகவும் ஆர்ஜேடியின் சையது சஹாபுத்தீனை தோற்கடித்தார். கிரிமினல் அரசியல்வாதியான சஹாபுத்தீனை எதிர்த்து சிவானில் வேறு கட்சிகளின் கொடிகளும் பறக்காத நிலை இருந்தது நினைவுகூரத்தக்கது.