மத்திய அரசின் உண்மை கண்டறியும் பிரிவின் செயல்பாட்டை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டுதகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கொண்டு வந்தது. இதில் சில திருத்தங்களை கடந்தாண்டு கொண்டுவந்தது.

இதன்படி உண்மை கண்டறியும் பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இது, சமூக ஊடகங்களில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தவறான தகவல்கள் வந்தால், அதை போலி செய்தி என அறிவித்து வந்தது. அதன்பின் அந்த தகவல்களை, சமூக ஊடக நிறுவனங்கள் நீக்கி வந்தன.

மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகள் அரசியல் சாசனத்துக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிராக இருக்கிறது என நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா உட்பட சில அமைப்புகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தவழக்குகளில் நீதிமன்றம் இறுதிமுடிவு எடுக்கும் வரை உண்மைகண்டறியும் பிரிவின் செயல்பாட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனுக்களை மும்பை நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி நிராகரித்து விட்டது.

இதனால் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "இந்த விவகாரம் பேச்சுசுதந்திரம் சம்பந்தப்பட்டது என்பதால், இது தொடர்பான மனுக்களில் மும்பை உயர் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை, உண்மை கண்டறியும் பிரிவின் செயல்பாடு குறித்த மத்திய அரசின் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது" என அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in