

புதுடெல்லி: மியான்மரில் ராணுவ நடவடிக்கைக்குப் பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் இந்தியாவின் ஜம்மு, உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குடியேறினர். அவர்களை இனம் கண்டு மியான்மர் திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அத்துடன், சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியாவில் முகாம்களில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்கள் அகதிகளாக கருதப்பட வேண்டும் என்று பிரியாளிசர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியா வரும் வெளிநாட்டினர் தங்களது உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் இழக்காமல் வாழ மட்டுமே இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ன்படி உரிமை உள்ளது. அதைவிடுத்து இந்நாட்டிலேயே நிரந்தரமாக வசித்து குடியுரிமை பெறும் உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது. இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் இல்லை. அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். ஆகையால் ஐநா ஆணையத்தின் அகதிகள் அட்டை அவர்களுக்கு இந்திய அரசு வழங்குவதில்லை.
ஏற்கெனவே வங்கதேசத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்களால் நாட்டின் எல்லையோர மாநிலங்களான அசாம், மேற்கு வங்க மக்கள் தொகை எண்ணிக்கையில் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுவதால் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் ரோஹிங்கியாக்கள் போலி ஆவணங்கள் தயாரித்தல், ஆள் கடத்தல், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்களைச் செய்து வருவதாகத் தொடர்ந்து புகார்கள் பதிவாகியுள்ளன. ஆகவே எந்த நபருக்கு அகதி அங்கிகாரம் அளிக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானிக்கும். சட்டமன்றத்தின் சட்டகத்துக்கு வெளியே இருக்கக்கூடிய நீதித்துறை இந்த விவகாரத்தில் தலையிட முடியாது.
சம உரிமை கோரும் அதிகாரம் வெளிநாட்டினருக்கும், சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்களுக்கும் கிடையாது. இவ்வாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.