Published : 20 Mar 2024 02:02 PM
Last Updated : 20 Mar 2024 02:02 PM

பசுபதி குமார் பராஸின் ராஜினாமா ஏற்பு; கிரண் ரஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

பசுபதி குமார் பராஸ் | கோப்புப்படம்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகியிருக்கும் பசுபதி குமார் பராஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவர் வகித்து வந்த உணவு பதப்படுத்தும் துறையை, கூடுதல் பொறுப்பாக புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு ஒதுக்கியுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமரின் ஆலோசனையின் படி, இந்திய அரசியலைமைப்புச்சட்டம் சரத்து 72, பிரிவு (2) கீழ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கும் பசுபதி குமார் பராஸின் ராஜினாமாவை குடியபசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். மேலும், பிரதமரின் ஆலோசனைின் படி, பசுபதி கவனித்து வந்த உணவு பதப்படுத்தும் துறையை, புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சிக்கு பிஹாரில் ஓர் இடம் கூட கொடுத்ததால், அக்கட்சியின் தலைவர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.

பிஹாரின் ஹாஜிபூர் (தனித் தொகுதி) மக்களவைத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பசுபதி குமார் மீண்டும் அதே தொகுதியில் இருந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் ராம் விலாஸ் பாஸ்வான் 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்த அத்தொகுதி, பாஜக சார்பில் அவரது மகனான சிராக் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனான பகை காரணமாக, சிராக் பாஸ்வான் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தனது தந்தை நிறுவிய ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியிலிருந்தும், என்டிஏ கூட்டணியில் இருந்தும் விலகி, தனியாக போட்டியிட்டார்.

இதனிடையே தனது ராஜினாமா குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பசுபதி குமார் பராஸ், “மக்களவைத் தேர்தலுக்காக பிஹாரில் 40 வேட்பாளர்களை என்டிஏ அறிவித்துள்ளது. எங்கள் கட்சிக்கு 5 எம்பிகள் இருந்தனர். நான் மிகவும் நேர்மையுடன் பணியாற்றினேன். எனக்கும், எங்களின் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, என்டிஏ கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே கூட்டணிக் கட்சித் தலைவரான பசுபதி குமார், தான் நடத்தப்பட்ட விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் முன்பு, “பிரதமர் மோடி சிறந்த தலைவர். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்டிஏ கூட்டணிக்கு நான் விசுவாசமாக இருந்தேன். அதற்கு வெகுமதியாக அநீதியை பெற்றுள்ளேன்” எனக் கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x