Published : 20 Mar 2024 11:37 AM
Last Updated : 20 Mar 2024 11:37 AM

5 நீதிக் கொள்கை, 25 உத்தரவாதம் - விரைவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் செயற் குழு கூட்டத்தில் நேற்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சியின் 5 நீதிக் கொள்கை மற்றும் 25 உத்தரவாதங்கள் இடம்பெறவுள்ளன.

டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, அம்பிகா சோனி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், குமார் செல்ஜா, பிரியங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 25 உத்தரவாதங்களுடன் 5 நீதிக் கொள்கைகள் இடம்பெறவுள்ளன.

நீதியை நிலைநாட்டுதல்: நீதியை நிலைநாட்டுதல் நடவடிக்கையின் கீழ், கீழ்கண்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ளும்: விரிவான சமூக, பொருளாதார மற்றும் சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். எஸ்சி, எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, சமஅளவிலான வாய்ப்புகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

எஸ்சி/எஸ்டி துணை திட்டத்தின் கீழ் மக்கள்தொகை அடிப்படையில் சமஅளவில் சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும். வனஉரிமை சட்ட தீர்மானம் ஓர் ஆண்டுக்குள் கொண்டுவரப்படும். எஸ்டி பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தனி பகுதிகள் ஏற்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கான நீதி: விவசாயிகளுக்கான நீதி உத்தரவாதத்தின் கீழ், விவசாயிகளுக்கு உதவும் வகையில் விரிவான திட்டங்களை காங்கிரஸ் வழங்கும். அவை: சுவாமிநாதன் குழு வகுத்த விதிமுறையின் படி குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்.

கடன் தள்ளுபடி ஆணையம் ஏற்படுத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். பயிர்சேதம் ஏற்பட்ட 30 நாட்களுக்குள், காப்பீடு தொகை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்படும். வேளாண் பொருட்களுக்கு நிலையான இறக்குமதி - ஏற்றுமதி கொள்கை அமல்படுத்தப்படும். ஜிஎஸ்டி வரியிலிருந்து வேளாண் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

தொழிலாளர் நீதி: தொழிலாளர் நீதி உத்தரவாதத்தின் கீழ் கீழ்கண்ட அனைவருக்கும் சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய சுகாதார சட்ட உரிமை ஏற்படுத்தப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400-ஆக நிர்ணயம் செய்யப்படும்.

வேலை உத்திரவாத சட்டம் கொண்டுவரப்பட்டு, வேலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கப்படும். மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக, ஒப்பந்த முறைகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இளைஞர்களுக்கான நீதி: மத்திய அரசில் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். படித்த இளைஞர்களின் திறன் மற்றும் அனுபவத்தை மேம்படுத்த ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். தேர்வுகளின் போது வினாத்தாள் வெளியாகும் சம்பவத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். டெலிவரி பணியாளர்களின் பணிச்சூழல் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். யுவ ரோஷ்னி திட்டத்தின் கீழ் ரூ.5000 கோடி ஸ்டார்ட் அப் நிதி ஏற்படுத்தப்படும்.

பெண்களுக்கான நீதி: மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மத்திய அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்ட பணியாளர்களின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். பெண்களின் சட்ட உரிமைகளை பாதுகாக்க ஒவ்வொரு கிராமத்தில் அதிகார மைத்திரிகள் நியமனம் செய்யப்படுவர். சாவித்திரிபாய் புலே விடுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

இந்த உத்தரவாதங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுகின்றன. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப் பின் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவலில், ‘‘நாடு மாற்றத்துக்கான அழைப்பை விடுக்கிறது.

நமது தேர்தல் அறிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிப்படுத்துவது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நமது உறுதிப்பாட்டை எடுத்துச் செல்வது ஆகியவற்றை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x