கோப்புப்படம்
கோப்புப்படம்

மூன்றாம் பாலின மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: மத்திய கல்வி அமைச்சகம் முடிவு

Published on

புதுடெல்லி: மூன்றாம் பாலின மாணவர்களின் இடைநிற்றலைத் தடுத்து நிறுத்ததேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த மத்திய கல்விஅமைச்சகம் தீர்மானித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் ஒருபகுதியாக ‘அனைத்து பாலினங்களையும் உள்ளடக்கிய நிதி’ ஒதுக்கீடு குறித்த வழிகாட்டுதலை வெளியிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மூன்றாம் பாலின மாணவர்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வைத்த ஆலோசனைகளையும் இணைக்க மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, பால்புதுமையர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவாதிக்கும் கூட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 74 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள். ஆனால், மூன்றாம் பாலினத்தவர்களில் 56.1 சதவீதத்தினர் மட்டுமே எழுத்தறிவுடன் இருக்கின்றனர். அதிலும் 6 வயதுக்கு உட்பட்ட 54, 854 மூன்றாம் பாலின குழந்தைகள் இந்தியாவில் இருப்பது அதில் தெரியவந்தது. இத்தகைய மூன்றாம் பாலின குழந்தைகளின் பள்ளி சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்று வெளியேறும் விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் நடந்து முடிந்த மனிதஉரிமைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம், மூன்றாம் பாலின குழந்தைகளை மனமுவந்து ஏற்கும் சூழல் நமது பள்ளிக்கூடங்களில் கனியவில்லை, இன்னமும் ஆண்,பெண் என்கிற இரு பாலினங்களை மையப்படுத்தியே அவை செயல்படுகின்றன.

மூன்றாம் பாலின குழந்தைகளுக்கான பிரத்தியேக கழிப்பிடவசதிகள், பாலின பேதமற்ற சீருடை, பாலின அடிப்படையிலான சீண்டல், பாகுபாடுகளைக் களையும் கல்விக்கொள்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதற்குத் தீர்வு காணலாம். முக்கியமாக மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தும் விதமாக பி.எட். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்று மூன்றாம் பாலின மாணவர்களின் இடைநிற்றலைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்க தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in