புதுச்சேரி, தெலங்கானா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி, தெலங்கானா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
Updated on
1 min read

புதுச்சேரி/ ஹைதராபாத்: ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலைஆளுநர் கூடுதல் பொறுப்பு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசை சவுந்தரராஜன், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று முன்தினம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் நேற்று ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘புதிய ஏற்பாடுகள் செய்யும்வரை, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் இருந்து, மேற்கண்ட நியமனங்கள் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை 11.15 மணி அளவில்,தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்க பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார். அவருக்கு தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே,பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

வரும் 22-ம் தேதி புதுச்சேரியில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கிறார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பணியாற்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.

தாய்நாட்டுக்கு சேவை செய்ய, எனக்கு இந்த கூடுதல் பொறுப்பை வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை எங்கு போட்டி? இதற்கிடையே, தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். தூத்துக்குடி, தென் சென்னை அல்லது கன்னியாகுமரி தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in