உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘ரிட்' மனுவை வாபஸ் பெற்றார் கவிதா
ஹைதராபாத்: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா, கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறையால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
பிறகு அவர், டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில்அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு எதிராக கவிதா கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான ரிட் மனுவை கவிதா நேற்று வாபஸ் பெற்றார். இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. ஆனால், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தன்னை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர் எனும் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் கவிதா தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தாயை சந்திக்க மனு: டெல்லி அமலாக்கத் துறையின் விசாரணையில் உள்ள கவிதாவுக்கு தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை உறவினர்களை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கவிதாவை அவரது சகோதரர் கே.டி.ராமாராவ், மாமா ஹரீஷ் ராவ் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்நிலையில் தனது தாயார் ஷோபா மற்றும் தனது இரு மகன்களான ஆதித்யா மற்றும் ஆராவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்துள்ளார்.
