

'நாட்டை கொள்ளையடித்த மோடி' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் ஒரு கவிதை எழுதியுள்ளார். #ModiRobsIndia என்ற ஹேஷ்டேகின் கீழ் அதை ட்ரெண்ட் செய்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு வைர வியாபாரி நிரவ் மோடி மோசடியாக பணப் பரிமாற்றம் செய்துள்ளது அம்பலமான நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "இந்தியாவை சூறையாடுவது எப்படி என்பது பற்றி நிரவ் மோடி நாட்டிற்கு வழிகாட்டியுள்ளார். பிரதமர் மோடியை கட்டிப்பிடி. பின் டாவோஸ் மாநாட்டில் அவரை சந்தித்து பேசு. இதை பயன்படுத்தி 12,000 கோடி ரூபாய் மோசடி செய். பின்னர் மல்லையா பாணியில் நாட்டை விட்டு தப்பியோடி விடலாம். ஆனால், மத்திய அரசு அவரை வேறு வழிகளில் தேடிக் கொண்டிருக்கும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலில் லலித் மோடி, அடுத்து விஜய் மல்லையா இப்போது நிரவ் மோடி என அடுத்தடுத்து நாட்டைவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமரின் மவுனத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ள மக்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கின்றனர். அவரோ, நான் இந்த தேசத்தின் பாதுகாவலர் எனக் கூறுகிறார். அவர், உண்மையில் யாருக்கான பாதுகாவலர்" என்று ராகுல் கவிதைநடையில் வினவியிருக்கிறார்.