கூகுள் மேப்பை நம்பி வர வேண்டாம்: சாலையோரம் பேனர் வைத்த குடகு கிராம மக்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: மேப் விவரம் தவறானது என்று கர்நாடகாவின் குடகு பகுதி மக்கள் சாலையோரம் பேனர் வைத்துள்ளனர். கர்நாடகாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் குடகு மலைப் பகுதி அமைந்துள்ளது. இது, ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. குடகு மலைப் பகுதியின் மடிகேரி, விராஜ்பேட்டையில் ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்' ஓய்வு விடுதிகள் செயல்படுகின்றன.

இயற்கை எழிலை ரசிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடகு மலைப் பகுதியில் அமைந்துள்ள ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்களுக்கு' வருகின்றனர். புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் கூகுள் மேப் உதவியுடன் குடகுமலைப் பகுதியில் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆனால் கூகுள்மேப்பின் தவறான தகவலால் அங்குள்ள குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வழிதவறி செல்கின்றனர். நாள்தோறும் பலருக்கு சரியான வழி யைக் கூறி சோர்வடைந்த கிராம மக்கள், அங்குள்ள முக்கிய சாலைப் பகுதியில் விழிப்புணர்வு பேனரை வைத்துள்ளனர்.

அதில், “கூகுள் தகவல் தவறானது. இந்த சாலை கிளப் மஹிந்திராவுக்கு செல்லும் வழியல்ல’’ என்று தெளிவாக எழுதி வைத்துள்ளனர். இந்த சாலையோர பேனர் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக பலர், தங்களது சொந்த அனுபவங்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு வலைதளவாசி வெளியிட்டுள்ள பதிவில், “ஒருமுறை குடகின் மடிகேரி பகுதிக்கு காரில் சென்றேன். கூகுள் மேப்பின் தவறான தகவலால் வேறொரு சாலையில் சுமார் 80 கி.மீ. தொலைவுக்கு சென்றுவிட்டேன். இறுதியில் உள்ளூர் நபர் ஒருவர் சரியான வழியை காட்டினார்’’ என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வலைதளவாசி கள் கூறும்போது, “மலைப் பகுதிகளில் வாகனங்களில் செல்லும் போது கூகுள் மேப்பை கண்மூடித் தனமாக நம்பக்கூடாது. உள்ளூர் மக்களிடம் வழிகேட்டு செல்ல வேண்டும்’’ என்று அறிவுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in