

புதுடெல்லி: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வரும் உயரதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், குஜராத், பிஹார், உத்தர பிரதேச மாநில உள்துறை செயலர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அத்துடன் இந்த மாநிலங்களை சேர்ந்த உயரதிகாரிகள் சிலரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் ஜார்க்கண்ட், இமாச்சல், உத்தராகண்ட் மாநில உள்துறை செயலர்களை பணியிடமாற்றம் செய்யவும் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் மேற்கு வங்க போலீஸ் டிஜிபியை பணியிட மாற்றம் செய்யவும் மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல், மிசோரம் மாநிலங்களில் மூத்த அதிகாரிகள் சிலரை மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சஹால், துணை மற்றும் கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.