

ஜகத்யாலா: மக்களவைத் தேர்தலில் சக்தியை (பெண்களை) போற்றுபவர்களுக்கும் அதனை எதிர்ப்பவர்களுக்கும் இடையே யுத்தம் நடக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று முன்தினம் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைநீதி நடைபயணம் நிறைவு பெற்றது. அப்போது ராகுல் காந்தி பேசும் போது, ‘‘மோடி எனும் நபருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. சக்திக்கு (அதிகாரம்) எதிராகத்தான் போராட்டம் நடத்துகிறோம். இந்த ராஜாவின் (மோடி) ஆத்மா என்பது அமலாக்கதுறை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சிபிஐ, வருமான வரித் துறை போன்றவற்றில் இருக்கிறது. இவை இல்லாவிட்டால் மோடி வெற்றி பெற மாட்டார்’’ என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலம், ஜகத்யாலாவில் பாஜக சார்பில் நேற்று நடத்தப்பட்ட விஜய சங்கல்ப சபையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு தாயும், மகளும் சக்தியின் வடிவம். நாம் அனைவரும் சக்தியைஆராதிக்கிறோம், போற்றுகிறோம். ஆனால் சிலர் சக்தியை நிர்மூலமாக்குவோம் என பேசியுள்ளனர். இந்த சவாலை நான் ஏற்கிறேன். நம் தாய், பெண் பிள்ளைகளை இவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உயிர்த் தியாகம் செய்ய வும் நான் தயாராக உள்ளேன்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளோம். நிலவில் இந்தியா கால் பதித்த இடத்துக்கு ‘சிவசக்தி’ என பெயரிட்டோம்.
மக்களவைத் தேர்தலில் சக்தியை (பெண்களை) போற்றுபவர்களுக்கும் அதனை எதிர்ப்பவர்களுக்கும் இடையே யுத்தம் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது ஜூன்4-ம் தேதி தெரிய வரும். நாடுவளர்ச்சி அடைந்தால் தெலங்கானாவும் வளர்ச்சி அடையும். தெலங்கானாவில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை மக்களின் உற்சாகத்தை பார்த்தாலே தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸும், பிஆர்எஸ் கட்சியும் மோடியை விமர்சிப்பதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளன. நாட்டை கொள்ளை அடிக்கவே குடும்ப கட்சிகள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டால், அவை குடும்ப அரசியல் கட்சிகள் செய்த ஊழலாகவே இருக்கும். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக கட்சியும், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் பெயரும் உள்ளன.
இந்தப் பட்டியலில் பிஆர்எஸ் கட்சியும் சேர்ந்துள்ளது. இங்குள்ள காலேஸ்வரம் அணை கட்டும் திட்டம், டெல்லி மதுபான கொள்கைஊழல் வழக்கில் பிஆர்எஸ் கட்சியின் பெயர் அடிபடுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.