Last Updated : 20 Feb, 2018 02:21 PM

 

Published : 20 Feb 2018 02:21 PM
Last Updated : 20 Feb 2018 02:21 PM

கொடியேறி, பினராயி விஜயனுக்கு காத்திருக்கும் சவால்கள் : கேரள மார்க்சிஸ்ட் மாநில மாநாடு 22-ல் தொடக்கம்

 

கேரள அரசியலில் அடுத்து வரக்கூடிய ஒருவாரம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் 22ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், முதல்வர் பினராயி விஜயனுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கும் முக்கியமான நாட்களாக இருக்கப்போகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை பல்வேறு சவால்களைக் அமைதியாக கடந்து வந்து இருந்தாலும்கூட, அரசின் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்த கேள்விகள், கொடியேறி மகன் விவகாரம் இந்த மாநாட்டில் பிரதானமாக எதிரொலிக்கும்.

22-ம் தேதி தொடங்கும் இந்த மாநில மாநாட்டில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட மாவட்ட, வட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் பினராயி விஜனுக்கும், செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கும் எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கடந்த 3 ஆண்டுகளாக முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்

அதன் பின் கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் பினராயி விஜயனும், கொடியேறி பாலகிருஷ்ணனும் மாநிலத்தில் பல்வேறு நெருக்கடிகளையும் , சவால்களைம் எதிர்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆட்சியையும், வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார்கள்.

அப்போது, கடந்த 21 மாத பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும். மக்களுக்கு அளித்த என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன, எது நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்தெல்லாம் பேசப்படும்.

அதேசமயம், செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கடந்த சில வாரங்களாகச் சந்தித்து வரும் தனது மகன் விவகாரம் இந்த மாநாட்டில் கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் அது அவருக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்திவிடும்.

கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினோய் துபாயைச் சேர்ந்த நிறுவனத்தை ரூ.13 கோடியை ஏமாற்றிவிட்டார் என புகார் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் அனைத்து நாளேடுகளிலும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் இந்த விவகாரம் கட்சியின் மாநில மாநாட்டில் எதிரொலிக்கும் பட்சத்தில் கொடியேறி பாலகிருஷ்ணன் மீதான விவாதத்தை பினராயி விஜயன் தொடங்குவாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இருவரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், சிறந்த நண்பர்கள் என்பதால், அந்த கேள்வி எழுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ முதல்முறையாக மாநில முதல்வரும், கட்சியின் மாநில செயலாளரும் மிகுந்த எச்சரிக்கையுடன் மாநில மாநாட்டை எதிர் கொள்கிறார்கள். எந்தவிதமான இடர்பாடுகளும் இன்றி மாநாடு, அமைதியாக முடிய வேண்டும்.

இந்த கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களைக் கூற உரிமை இருக்கிறது. எதிர்ப்புக் கருத்துக்களையும் கூறலாம். ஆனால், தலைமைக்கு எதிராக எதிர்ப்பு எழும் பட்சத்தில் அது குறிப்பாக கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு பாதகமாகிவிடும்.

ஒருவேளை எந்தவிதமான சச்சரவுகளும், சர்ச்சைகளும்இல்லாமல் மாநாடு முடிந்துவிட்டால், கொடியேறி பாலகிருஷ்ணன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு, 2 வது முறையாக செயலாளராக நியமிக்கப்படுவார். ஒருவேளை அவரின் மகன் விவகாரம் எழுப்பப்பட்டு சர்ச்சைகளும், கேள்விகளும், விவாதங்களும் வரும்பட்சத்தில் அவரின் பதவி கேள்விக்குறிதான்.

முதல்வர் பினராயி விஜயனைப் பொறுத்தவரை, அவர் அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அப்போது, சரியாகச் செயல்பாட அமைச்சர்கள் குறித்து பேசப்படும் போது, அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, மூத்த உறுப்பினர்களுக்கு பதவிகள் தரப்படலாம்.

பாலகிருஷ்ணன், பினராயி விஜயன் ஆகியோருக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகமான அம்சம் இப்போதுவரை என்னவென்றால், இதுவரை கட்சிக்குள் இருந்து வெளிப்படையாக எந்த உறுப்பினர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை என்பதுமட்டும்தான்.

ஒருவேளை இதுபோன்ற சூழலை மாநாடு முடியும்வரை இருவரும் கொண்டுவந்துவிட்டால், மனநிறைவாகவும், ஆட்சியும், கட்சியும் இருவரின் கையைவிட்டு மாறாமல் இருக்கும். கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியில் சலனமில்லாத சூழல் நிலவும்” எனத் தெரிவிக்கிறார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x