Published : 18 Mar 2024 04:00 PM
Last Updated : 18 Mar 2024 04:00 PM

மேற்கு வங்க டிஜிபி, 6 மாநில உள்துறைச் செயலர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்க மாநில காவல் துறை டிஜிபி மற்றும் குஜராத், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த உள்துறைச் செயலாளர்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்க மாநில புதிய டிஜிபியாக நியமிக்கும்படி தகுதி கொண்டவர்களின் பரிந்துரைப் பட்டியலை இன்று (மார்ச் 18) மாலை 5 மணிக்குள் அனுப்பும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் மிசோரம், இமாச்சலப் பிரதேச மாநிலங்கள் கூடுதல் நிர்வாகத் துறை செயலாளர்களையும் நீக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிர மாநிலம் பிர்ஹான் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹலையும் நீக்கும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த நீக்கத்துக்கான காரணத்தை தேர்தல் ஆணைய தரப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதி செய்ய ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் சொந்த மாவட்டங்களில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் என்றால், அவர்களையும் பணியிட மாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது. ஆனால், தேர்தலை நியாயமாக நடத்துவதற்காக என்றால் அரசாங்கம் யாரை வேண்டுமானால் மாற்றலாம், நீக்கலாம். இதற்கான உத்தரவை தலைமைத் தேர்தல் ஆணையமும் பிறப்பிக்கலாம்.

அதன் அப்படையிலேயே குஜராத், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த உள்துறைச் செயலாளர்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x