Published : 08 Feb 2018 07:25 AM
Last Updated : 08 Feb 2018 07:25 AM

ரூ.2 லட்சம் வரதட்சணை தொகையை ஈடுசெய்ய மனைவிக்கு தெரியாமல் சிறுநீரகம் விற்பனை: கணவன் உட்பட இருவர் கைது

வரதட்சணை தரத் தவறியதால் தனக்குத் தெரியாமல் தனது ஒரு சிறுநீரகத்தை விற்றுவிட்டதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்பெண்ணின் கணவர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மே.வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பராக்கா காவல் நிலையத்தில் ரீட்டா சர்க்கார் (28) என்ற பெண் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

12 ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணம் ஆனது. வரதட்சணை கேட்டு எனது கணவர் குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தி வந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. என்னை கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனக்கு குடல்வால் நீக்க அறுவை சிகிச்சை செய்யப்போவதாக மருத்துவமனையில் கூறினர். ஆனால் இந்த சிகிச்சைக்கு பிறகும் எனக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் மன்றாடி வந்தேன்.

ஆனால் அவர் செவிசாய்க்காததால், எனது உறவினர் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன் இதில் எனது வலது சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. கொல்கத்தாவில் எனக்கு அறுவை சிகிச்சை நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என எனது கணவர் என்னை எச்சரித்து வந்தார். இதற்கான காரணம் இப்போதுதான் புரிந்தது. எனது பெற்றோர் ரூ.2 லட்சம் வரதட்சணை தரத் தவறியதால் என்னை ஏமாற்றி எனது சிறுநீரகத்தை விற்றுவிட்டனர். இவ்வாறு ரீட்டா தனது புகாரில் கூறியுள்ளார்.

ரீட்டா தனது பெற்றோர் வசிக்கும் பராக்காவில் இந்தப் புகாரை அளித்துள்ளார். அதே மாவட்டத்தில் லால்கோலா நகரை சேர்ந்த தனது கணவரான துணி வியாபாரி விஸ்வஜித் சர்க்கார், அவரது சகோதரர் ஷ்யாம் லால், தாய் புலாராணி ஆகியோருக்கு எதிராக இப்புகாரை அளித்துள்ளார். இதையடுத்து மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், விஸ்வஜித், ஷ்யாம்லால் ஆகிய இருவரை கைது செய்தனர். புலாராணியை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சிறுநீரகத்தை விற்றதாக விஸ்வஜித் ஒப்புக்கொண்டார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விரைவில் சோதனை நடத்தப்படும். சிறுநீரகக் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு இதில் தொடர்புள்ளது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x