Published : 18 Mar 2024 06:58 AM
Last Updated : 18 Mar 2024 06:58 AM
புதுடெல்லி: மால்டா குடியரசு நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி.ரூன். இந்த கப்பலில் 1 மில்லியன் டாலர் மதிப்பில் 37,800 டன் சரக்குகள் இருந்தன. இதை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேர், கடந்த டிசம்பர் 14-ம் தேதி கடத்தினர். கடந்த 3 மாதங்களாக இந்த கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோமாலிய கொள்ளையர்கள் இந்த கப்பலை பயன்படுத்தி, பிற சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்திய கடல் பகுதியில் இருந்து 2,600 கி.மீ தொலைவில் இந்த கப்பல் சென்று கொண்டிருந்தது. இதை இந்திய கடற்படை கண்டுபிடித்தது. ரூன் சரக்கு கப்பலை இடைமறிக்க ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலுக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கு உதவியாக ரோந்து பணியில் ஈடுபட்ட ஐஎன்எஸ் சுபத்ரா கப்பலும் அனுப்பப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை காலை ரூன் சரக்கு கப்பலை, ஐஎன்எஸ் கொல்கத்தா சுற்றிவளைத்தது.
இதில் இருந்து அனுப்பப்பட்ட டிரோன், சரக்கு கப்பலின் மேல் பகுதியை படம்பிடித்தது. அதை சோமாலிய கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து சரக்கு கப்பலின் சுக்கான், நேவிகேஷன் உதவி ஆகியவற்றை இந்திய போர்க்கப்பல் முடக்கியது.
இதனால் வேறுவழியின்றி கடற்கொள்ளையர்கள் 35 பேரும் இந்திய கடற்படையினரிடம் சரணடைந்தனர். இதையடுத்து கடற்படை ஹெலிகாப்டரில் சென்ற கமாண்டோக்கள் சரக்கு கப்பலில் இறங்கி கப்பல் ஊழியர்கள் 17 பேரை பத்திரமாக மீட்டனர். நேற்று முன்தினம் சரக்கு கப்பல் இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் வந்தது. அதில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருக்கிறதா என கடற்படையினர் சோதனையிட்டனர்.
பின்னர் அந்த கப்பலை இந்தியா கொண்டு வரும்பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படையினர் சுமார் 40 மணி நேரம் மேற்கொண்ட நடவடிக்கையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT