

புதுடெல்லி: டெல்லி ஜல் போர்டு (குடிநீர் வாரியம்) ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத் துறை (ஈடி) சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராக கோரி ஏற்கெனவே அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈடி பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் கேஜ்ரிவால் நேரில் ஆஜராக கோரி ஈடி சம்மன் அனுப்பியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு டெல்லி ஜல் போர்டு உருவாக்கப்பட்டது. தலைநகர் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்வது இதன் பொறுப்பாகும். மேலும், யமுனை நதி மற்றும் பக்ரா அணை, டெல்லிக்கு அருகிலுள்ள கால்வாய் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை சுத்தம் செய்யும் பொறுப்பும் இந்த வாரியத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த வாரியத்தில் முன்பு தலைமை பொறியாளராக இருந்தஜகதீஷ் குமார் அரோரா விதிமுறைகளை மீறி ரூ.38 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை என்கேஜி இன்ப்ரா நிறுவனத்துக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக அவர் பெற்ற லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கியதாக சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் ஈடியும் வழக்கு தொடர்ந்து உள்ளது. தற்போது அந்த வழக்கில்தான் ஆஜராகும்படி கேஜ்ரிவாலுக்கு ஈடி சம்மன் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறுகையில், “அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்வதன் மூலம் மக்களவை பிரச்சாரத்திற்கு அவர் செல்லவிடாமல் தடுக்கும் மற்றொரு உத்திதான் இந்த சம்மன்’’ என்றார்.