தொழுகையில் ஈடுபட்டதால் மோதல்: குஜராத் பல்கலைக்கழகத்தில் 5 வெளிநாட்டு மாணவர் காயம்
புதுடெல்லி: குஜராத் பல்கலைக்கழத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், ரம்ஜான் நோன்பை முன்னிட்டு, பல்கலை வளாகத்தில் நேற்று தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கல்வீச்சு தாக்குதலில் வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் எஸ்விபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம்தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இது வெட்கக்கேடான செயல்.முஸ்லிம்கள் அமைதியாக தங்கள் மத வழிபாட்டை பின்பற்றும்போது மட்டும் மத கோஷம் எழுகிறது. முஸ்லிம்களை பார்த்தாலே உங்களுக்கு கோபம் வருவது ஏன்? குஜராத் அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம்.
இதில் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்களா? உள்நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பு, இந்தியாவின் நல்லெண்ணத்தை நாசமாக்குகிறது என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என கூறியுள்ளார்.
