Published : 04 Feb 2018 03:07 PM
Last Updated : 04 Feb 2018 03:07 PM

கர்நாடகாவின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும் நேரம் ஒதுக்குங்கள் மோடி: சித்தராமையா ட்வீட்; எடியூரப்பா பதிலடி

தேர்தல் பிரச்சாரத்துக்காக பெங்களூரு வரும் பிரதமர் மோடியை ட்விட்டரில் வரவேற்றுள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா அப்படியே மஹதாயி பிரச்சினை தொடர்பாகவும் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார்.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிடத்தின் பார்வை அதிகமாகவே பதிந்துள்ளது. அமித் ஷாவின் வருகையை அடுத்து தற்போது பிரதமர் மோடியும் கர்நாடகா வந்துள்ளார்.

இந்நிலையில், சித்தராமையா அவரது ட்விட்டர் பக்கத்தில், "இந்நாட்டில் தொடங்கப்படும் பல்வேறு ஸ்டார்ட் அப் தொழில்களுக்கும் புத்தாக்க தொழில்களுக்கும் மையமாக விளங்கும் நம்ம பெங்களூருவுக்கு தாங்கள் வருவதில் எனக்கு மகிழ்ச்சி.

முதலீடுகள், புத்தாக்க சிந்தனைகள், கொள்கைகள் என எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்துள்ள கர்நாடக மாநிலம் பல துறைகளில் இந்தியாவை பெருமையடையச் செய்திருக்கிறது.

அத்தகைய நம்ம கர்நாடகாவுக்கு வரும் தங்களை வரவேற்கிறேன். அதே வேளையில், எனது மக்களின் சார்பில், கர்நாடகாவின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள்" என 2 ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, "பிரதமர் மோடியை தாங்கள் வரவேற்றுள்ளைமைக்கு நன்றி.

தாங்கள் கூறுவதுபோல் தற்போது கர்நாடகா நிறைய விஷயங்களில் முதலிடம் பிடித்திருக்கிறது.

ஊழலில் முதலிடம், விவசாயிகள் தற்கொலையில் முதலிடம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் முதலிடம், அதிகாரிகளின் மர்ம மரணங்களில் முதலிடம், நேர்மையான அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதில் முதலிடம், பெங்களூருவின் கட்டமைப்பை நாளுக்கு நாள் சிதைப்பதில் முதலிடம் என பல முதலிடம் பிடித்துள்ளது. கர்நாடகா இப்போது மோடியை நம்புகிறது" என ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

விரைவில்  சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x