Published : 17 Mar 2024 05:54 PM
Last Updated : 17 Mar 2024 05:54 PM
புதுடெல்லி: அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4-ம் தேதிக்கு பதிலாக ஜுன் 2-ம் தேதி எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, அருணாச்சல், சிக்கிம் மாநில வாக்குப்பதிவுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்படும் என்று அறிவித்திருந்தது. அது தற்போது ஜுன் 2ம் தேதி என மாற்றப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் டெல்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மக்களவை தேர்தல் தேதிகளை அறிவித்தனர். அவர்கள் நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன்படி ஆந்திராவில் மே 13-லும், ஒடிசாவின் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளிலும், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு ஏப். 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனிடையே அருணாச்சல், சிக்கிம் மாநில வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், இரண்டு மாநிலங்களின் பதவிக் காலமும் ஜுன் 2ம் தேதி நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 324, பிரிவு 172(1) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 15 படி ஒரு அரசின் பதவி காலம் முடிவடைவதற்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதனால் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ல் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை தேதி மட்டும் தான் மாற்றப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் அருணாச்சலப்பிரதேசம், சிக்கம் மாநில வாக்குபதிவு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT