அனுராதா பட்வால் | கோப்புப் படம்
அனுராதா பட்வால் | கோப்புப் படம்

பாஜகவில் இணைந்தார் பின்னணி பாடகி அனுராதா பட்வால்

Published on

புதுடெல்லி: பிரபல பின்னணிப் பாடகியான அனுராதா பட்வால், பாஜக தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.

இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியாக இருப்பவர் அனுராதா பட்வால். ஆயிரக்கணக்கான இந்திப் பாடல்களை பாடியுள்ளார். இது மட்டுமல்லாமல் மராத்தி, ஒரியா, பெங்காலி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.

திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல் பக்தி ரசம் சொட்டும் பஜனைப் பாடல்கள், பிரத்யேக ஆல் பங்களை அனுராதா பட்வால் அதிகம் வெளியிட்டுள்ளார். சினிமா பாடல்களுக்கு நிகராக அவரது பஜன் பாடல்களும் வெகுவாக பிரபலமடைந்திருந்தன.

கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார் அனுராதா பட்வால். மேலும் தேசிய விருது, பிலிம் பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாடகி அனுராதா பட்வால் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அர்ஜுன் சிங் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அனுராதா பட்வால் கூறியதாவது: நாட்டில் நடைபெற்று வரும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி சிறப்பாக அமைந்துள்ளது. பாஜக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. நான் பாஜகவில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கனவே கலையாதே படத்தில் `பூசு மஞ்சள்', பிரியமானவளே படத்தில் `என்னவோ என்னவோ என் வசம் நானில்லை` உள்ளிட்ட பாடல்களை அனுராதா பட்வால் பாடியுளளார். மேலும் பிரியமானவே படத்தில் பாடகியாகவும் ஒரு காட்சியில் அனுராதா பட்வால் தோன்றியிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in