‘வளர்ந்த இந்தியா’ இலக்கை எட்ட உங்கள் ஆதரவு தேவை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

‘வளர்ந்த இந்தியா’ இலக்கை எட்ட உங்கள் ஆதரவு தேவை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

Published on

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எனது குடும்ப உறுப்பினர்களே, நம் கூட்டணி பத்தாண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமே மத்திய அரசின் சாதனை. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டதற்கான பலன்தான் இந்த மாற்றம்.

நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக, பிரதமரின்சொந்த வீடு திட்டம், அனைவருக்கும் மின்சாரம், குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு வசதி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கான நிதியுதவி, மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ்பெண்களுக்கு உதவி உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி அமலாக்கம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து, முத்தலாக் தடை சட்டம், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம்,புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைத்தது, தீவிரவாதம் மற்றும் இடதுசாரி பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை அரசு எடுத்ததற்கு உங்கள் நம்பிக்கையும் ஆதரவுமே காரணம்.

வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற நம்முடைய இலக்கை எட்ட உங்கள் ஆதரவு தேவை. இதற்காக உங்கள் கருத்துகள், ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் இணைந்து நமது தேசத்தை தொடர்ந்து மிக உயர்ந்த இடங்களுக்கு கொண்டு செல்வோம் என்று நம்புகிறேன். உங்கள் சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

1 கோடி பேர் பதிவு: பிரதமர் மோடி தனது எக்ஸ்சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்தில், 1 கோடிக்கும் மேற்பட்டோர் இணையவழியில் பதிவு செய்துள்ளனர். நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் பதிவுகள் குவிந்து வருகின்றன. அசாம், பிஹார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதுவரை பதிவு செய்யாதவர்கள், விரைவில் பதிவு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in