Published : 28 Feb 2018 03:50 PM
Last Updated : 28 Feb 2018 03:50 PM

திரிபுராவில் பாஜக ஆட்சி- மக்களை குழப்பும் கருத்துக் கணிப்பு என இடதுசாரிகள் விமர்சனம்

திரிபுராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், மக்களை குழப்பும் வகையில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இடதுசாரி கட்சிகள் விமர்சித்துள்ளன.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கூட்டணியில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஆர்எஸ்பி, பார்வார்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதேசமயம், பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎப்டி) கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. பாஜக 51 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த முறை 59 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் நியூஸ் எக்ஸ் டிவிசேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் இடதுசாரி கூட்டணி 45% -46% வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக கூட்டணி 51% வாக்குகளை பெறும் என கூறியுள்ளது.

ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பில் இடதுசாரி கூட்டணி 40% வாக்குகளும், பாஜக கூட்டணி 49% வாக்குகளும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவோட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இடதுசாரிக் கூட்டணி 44.3% வாக்குகளும், பாஜக கூட்டணி 42.8% வாக்குகளும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வந்துள்ள நிலையில் இதனை இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறியதாவது:

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மக்களை குழப்புவதற்காக பாஜகவுக்கு ஆதரவாக  கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு நடத்தப்படுகிறது.

பிஹார் மற்றும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலின்போதும், அங்கு பாஜக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் பாஜக படுதோல்வியடைந்தது. இதை மறக்க முடியாது. திரிபுரா மக்கள் இடதுசாரி அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பாளர்கள'' எனக் கூறினார்.

திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படுகிறது. அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x