Published : 25 Feb 2018 09:49 AM
Last Updated : 25 Feb 2018 09:49 AM

நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தல்

நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதன் மூலமாக மட்டுமே அரசு நிர்வாகம் மேம்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதுகுறித்து, டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது என்ற இலக்கினை நோக்கி மத்திய அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால், அதிக அளவிலான செலவினங்கள் ஏற்படுகின்றன. மேலும், இதுபோன்று அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவதால் சிறந்த நிர்வாகத்தை மத்திய, மாநில அரசுகளால் மக்களுக்கு வழங்க முடிவதில்லை.

இவையனைத்துக்கும் தீர்வு காண வேண்டுமெனில், மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு, நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல்கள் நடைபெற்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஸ்திரமான அரசு அமைந்து சீரான கொள்கைகளை உருவாக்க முடியும். இதனால் அரசு நிர்வாகமும் மேம்படும்.

பொருளாதார சீர்திருத்தங்கள்

கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் பொருளாதார சீர்திருத்தங்களானது மக்கள் நலனையும், அரசியல் நிர்வாகத்தையும் மனதில் வைத்து கொண்டு வரப்பட்டவை ஆகும். மானியக் குறைப்பு, தேவையற்ற முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும். குறிப்பாக, ஏர் - இந்தியா நிறுவனத்தின் மீதான முதலீட்டை அரசு விலக்கிக் கொண்டதன் மூலம் விமானப் போக்குவரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், உள்கட்டமைப்பும் மேம்பட்டுள்ளது. மானியங்கள் குறைக்கப்பட்டதால் ஏழைகளுக்கு அதிக பலன் கிடைத்து வருவதுடன், அரசுக்கு செலவும் குறைந்துள்ளது. இதில் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு, அதிக அளவிலான மக்கள் நலத் திட்டங்களை அரசால் கொண்டு வர முடிகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற வரி - பொருளாதார சீர்திருத்தங்களால் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார். - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x