

புதுடெல்லி: “2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முழு அளவில் தயாராக இருக்கிறது. தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடத்தப்படும்” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி அட்டவணையை அறிவிப்பதற்காக தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றினார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜீவ் குமார், “இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பு இதுதான். மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
மக்களவைத் தேர்தலை நடத்த நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம். தேர்தலை திருவிழா போல் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண்கள். மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேர். மாற்றுப் பாலினத்தவர் 48 ஆயிரம் பேர். மொத்த வாக்காளர்களில் 1.82 கோடி பேர் முதன்முறை வாக்காளர்களாவர். 85 வயதைக் கடந்த வாக்காளர்கள் 82 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மிகுந்த உயர்ந்த தரத்தில் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். தேர்தல் நேரத்தில் போலி செய்திகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்தப்படும்” என்றார்.