

மகாத்மா காந்தி, அம்பேத்கர் குறித்த புத்தகங்களைக் காட்டிலும், பிரதமர் மோடி குறித்த புத்தங்களை மஹாராஷ்டிரா பள்ளிகள் அதிகமாக வாங்கி இருப்பு வைக்க உள்ளன.
பிரதமர் மோடி குறித்த புத்தகங்களை மட்டும் ரூ.59.42 லட்சத்துக்கு மகாராஷ்டிரா வாங்க உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
ஆனால், மகாத்மா காந்தி குறித்த புத்தகங்கள் ரூ.3.25 லட்சத்துக்கும், ரூ.24.28 லட்சத்துக்கு அம்பேத்கர் குரித்த புத்தகங்களும், மகாத்மா, புலே குறித்து ரூ.22.63 லட்சத்துக்கும் புத்தகங்களை வாங்கி அரசு பள்ளி நூலகங்களில் இருப்பு வைக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி குறித்து “சாச்சா சவுத்ரி மோடி” மராத்தி மொழியில் அச்சிடப்பட்ட 72 ஆயிரத்து 933 புத்தகங்களும், இந்தி மொழியில் “பிரதான் மந்திரி மோடி” என்ற புத்தகங்கள் 424 பிரதிகளும், 7,148 ஆங்கிலப்பிரதிகளும் வாங்கப்பட உள்ளன. இந்த புத்தகத்தின் சராசரி விலை ரூ.35 ஆகும். இந்த புத்தகங்களை டைமண்ட் பாக்கெட் நிறுவனம் அச்சிட்டுள்ளது.
மேலும், மராத்தி மொழியில் மோடி குறித்து எழுதப்பட்ட ரூ.45 மதிப்புள்ள 69, 416 புத்தகங்களும் கூடுதலாக, விலாஸ் புத்தக நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட உள்ளன. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்து மராத்தி மொழியில் எழுதப்பட்ட 72,933 புத்தகங்களும் வாங்கப்பட உள்ளன.
மாநில கல்விஆய்வு மற்றும் பயிற்சிக் குழுவின் இயக்குநர் சுனில் மகர் கூறுகையில், “ இந்த புத்தகங்கள் அனைத்தும் வல்லுநர்குழு தேர்வு செய்துள்ளது. நீங்கள் பிரதமர் மோடியின் புத்தகத்தை மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல், மற்ற தலைவர்கள் குறித்த புத்தங்களும் வாங்கப்பட்டுள்ளதையும் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டே கூறுகையில், “ மஹாராஷ்டிரா அரசின் இந்த செயல் மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரைக் காட்டிலும் மோடி உயர்ந்தவர் என்பதை காட்டுகிறது. குழந்தைகளின் மனதில் அரசியல் ரீதியான கருத்துக்களை திணிக்கும் முயற்சியாகும்” எனத் தெரிவித்தார்.