அமலாக்கத் துறை சம்மன் வழக்கு | டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்
அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமலாக்கத் துறை சம்மன்களுக்கு ஆஜராகததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி அனுப்பிய சம்மன்களை தொடர்ந்து நிராகரித்தது தொடர்பாக அமலாக்கத் துறை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இவ்விவகாரத்தில் இரண்டு புகார் மனுக்களை அமலாக்கத் துறை தொடர்ந்திருந்த நிலையில், அவற்றில் கேஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி மனுக்கள் மீதான விசாரணைக்கு கேஜ்ரிவால் இன்று (சனிக்கிழமை) நேரில் ஆஜராகினார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா ஜாமீன் உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், சொந்தச் செலவில் ரூ.15 ஆயிரத்துக்கு ஜாமீன் பத்திரம் வழங்கவும் உத்தரவிட்டதோடு ரூ.1 லட்சத்துக்கான உத்தரவாதத்தையும் வழங்கும்படி உத்தரவிட்டார்.

வழக்கு பின்னணி: முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பியிருந்த அமலாக்கத் துறையின் 8 சம்மன்களையும் நிராகரித்து இருந்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மோடி அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அமலாக்கத் துறை கடைசியாக பிப். மாத கடைசியில் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதில் மார்ச் 4ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கூறியிருந்தது. அந்த சம்மனை நிராகரித்திருந்த அரவிந்த் கேஜ்ரிவால், அது சட்டவிரோதமானது என்று தெரிவித்திருந்தார். என்றாலும், மார்ச் 12-ம் தேதிக்கு பின்னர் காணொலி கட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த அமலாக்கத்துறை, காணொலி மூலமாக விசாரணை நடத்த விதிகள் இல்லை என்பதால் நேரில் தான் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கிடையில் கேஜ்ரிவால் ஆஜராகாதது தொடர்பாக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புதிய மனுவும் தாக்கல் செய்தது.

அதன்படி அந்த புதிய மனு மீதான விசாரணைக்கு கேஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சூறாவளி பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கேஜ்ரிவால் பங்கேற்பதில் தடை ஏற்படலாம் என ஆம் ஆத்மி அஞ்சிவந்த நிலையில் அவர் மீதான கைது நடவடிக்கைக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in