

புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட வங்கதேசத்து கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மொசாம்பிக் தலைநகர் மபுடோவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 55,000 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு வங்க தேசத்துக்கு சொந்தமான எம்.வி. அப்துல்லா கப்பல் சோமாலிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை நண்பகல் அந்த கப்பல் கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இதையடுத்து, அவசர உதவி கோரி அழைப்பு வந்ததையடுத்து உடனடியாக நீண்ட தூர ரோந்துவிமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை அப்துல்லா கப்பல் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு நிலவரத்தை கேட்டறிய அதிலிருந்த பணியாளர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டது. ஆனால் பதில் இல்லை.
இந்த நிலையில், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான போர்க்கப்பல் அனுப்பிவைக்கப்பட்டு மார்ச் 14 காலை அப்துல்லா கப்பல் இடைமறிக்கப்பட்டது. மேலும், ஆயுத மேந்திய கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்ட வங்கதேச கப்பல் மீட்கப்பட்டு அதிலிருந்த பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அப்துல்லா கப்பலின் உரிமையாளரான கபீர் ஸ்டீல்ரீ-ரோலிங் மில்ஸின் தலைமை நி்ரவாக அதிகாரி மெஹருல் கரீம் கூறுகையில், “சோமாலிய கடற்கொள்ளையர்கள் 15-20 பேர் அப்துல்லா கப்பலை கடத்திச் சென்றுள்ளனர்’’ என்றார்.